Tuesday, January 19, 2010

காத்திராதே


* நாம் சுற்றித் திரிந்த
இடங்களில் எல்லாம்
சற்று அமர்ந்து செல்கிறேன்
நீ விட்டுச் சென்ற வார்த்தைகள்
இங்குதான் எங்கேனும்
சுற்றிகொண்டிருக்கும்.

* உன் கனத்த கதவுகளை
அகலத் திறந்துகொண்டு
இருண்ட காலங்களில்
வெளிச்சமாய் வருவேன் நான்
எனினும்...
எனக்காக காத்திராதே.


- மணிபாரதி துறையூர்

Friday, January 8, 2010

மொழி


நான் பேசுவது உனக்குப் புரியாது
உன் பாஷையிலோ எனக்குப் பரிச்சயமில்லை
இருவருக்கும் பொதுவான அந்நிய பாஷையிலும்
அன்பைச் சொல்லத் திறமில்லை எனக்கு
வகுப்பில்...
எல்லோரையும் போல்தான் நானும் உனக்கு
ஆனால்...
எப்போதாவது நீ
என்னைப் பார்த்து வீசும் ஒற்றைப் புன்னகை
பொக்கிஷம்தான் எனக்கு

உனக்குத்தெரியுமா..?
நடந்தே பழக்கப்படாத என் கால்கள்
கடும் வெயிலிலும் உனக்காக நடந்து சிவந்தன
நான் நம்பவே மறுக்கும் கடவுளைக் கூட
உன் வெற்றிக்காக மட்டுமே வேண்டத்தொடங்கினேன்
நீ மேடையேறி பரிசு வாங்கும் போது
கண்ணீர்மல்க நான் கைதட்டி மகிழ்ந்ததும்
ஒரு மழைநாளில் உனக்கு குடை தந்து நனைந்ததில்
காய்ச்சல் வந்து நான் கஷ்டப்பட்டதும்
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

சோதனைக்கூடத்தில்
கந்தக அமிலத்தை நீ
கைதவறி கொட்டியபோது
என் காலில் பட்டு எரிந்ததை
சொல்லவே இல்லை யாரிடமும்
கடைசி வரை...
என் நட்பும் நேசமும்
புரியாமலே போனதோ
பரவாயில்லை
ஆனால்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு
கடைசிநாள் பிரிகையில்
நெடுந்தூரம் நடந்து பின்
திரும்பிப் பார்த்தாயே
ஏன்..?

- துறையூர் மணி

எனது "மொழி" கவிதை 02-03-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது.