Monday, March 28, 2011

நத்தை


சுவாரஸ்யம் ஏதுமின்றி
நத்தை போல்
நகர்ந்துகொண்டிருந்த நாட்களில்
நம் சந்திப்பு தீர்மானிக்கப்பட்டது
நம்மை மீறிய சக்திகளால்
அதன் பின் என் நாட்கள்
நம் சந்திப்பை முன்னிருத்தியே திட்டமிடப்பட்டன

நிறைய செலவழித்தேன்
விரும்பி வாங்கினேன் விதவிதமாய்
உடைகள், கண்ணாடி, காலணி
இரண்டு நாட்களாய் உறக்கமில்லை
முடி திருத்திக்கொண்டேன்
மீண்டும் மீண்டும் தலைகோதிப் பார்த்தேன்
அடிக்கடி கண்ணாடி பார்த்தேன்
அடிக்கடி புன்னகைத்தேன்

உன்னிடம் என்ன பேசுவது
ஒத்திகை பார்த்தேன்
கடற்கரை, நிலா, மெல்லிசை, கவிதைகள்
உனக்கும் பிடிக்குமா
என் குரல் உன்னை வசீகரிக்குமா
எல்லோரும் குறிப்பிட்டுச் சொல்லும்
என் கண்கள், மீசை உன்னையும் கவருமா
என் perfume உனக்குப் பிடிக்குமா
என்ன உடை அணிவது
புத்தாடையா
எனக்கு மிகவும் பிடித்த உடையா
சிறுபிள்ளைத்தனமான
சின்ன சின்ன குழப்பங்கள்
இதுபோல்
உனக்கும் இருக்குமா..
இருந்ததா...
மீண்டும் குழப்பம்

ஏமாற்றங்கள் எனக்கு புதிதில்லை
எனினும்
நீ எப்படி தாங்கிக் கொள்வாயோ...
நம்மை மீறிய சக்திகளால்
ஒத்திப் போடப்பட்ட நம் சந்திப்பு
இனி ஒருபோதும் நிகழாது
நிகழவே நிகழாதென்பதை

நத்தை போல்
நகரத்தொடங்கிவிட்டது வாழ்க்கை
மீண்டும்...

என் அறையின்
இருண்ட மூலைகளிலேயே
என் perfume, கண்கள், மீசை
விமர்சிக்க யாருமின்றி
மட்கக் கடவது
மட்கக் கடவது


--மணிபாரதி துறையூர்