ஓவியம்: இளையராஜா |
ஒரு முறை என் அறைக்கு அருகில் உள்ள மளிகைக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பியபோது இவள் எதிரே வந்தாள். "உங்க வீடு இங்கேதானா" என்றாள். "ஆமாம்" என்றேன். "எது" என்றாள். நான் பதில் பேசவில்லை. அவள் என் அறையை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக காரணமே இல்லாமல் லுங்கி பனியனோடு அடுத்த தெருவரை நடந்துவிட்டு திரும்பினேன்.
இப்படியாக ஐந்தாறு வருடங்களாயிற்று.
இன்று இரவு சாப்பிட்டுவிட்டு திரும்பும்போது அந்த பெண் நின்றுகொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக விடுதியை விட்டு வெளியே வந்து வாசலில் நின்றுகொண்டிருந்தாள். நான் வருவதைப் பார்த்ததும் ஒரு முறை நேருக்கு நேர் என்னை பார்த்தாள், பின் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். நான் வழக்கம்போல் கடந்து வந்துவிட்டேன். சில அடிகள் நடந்த பிறகுதான் ஏதோ வித்தியாசமாகப் பட்டது.
அந்த விடுதிக்கு அருகே ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. கட்டில், மெத்தை, ஏஸி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். லாரி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விடுதியை காலி செய்கிறார்கள் என்பது உரைத்தது. திரும்பி வந்து அங்கே நின்றேன். யாரிடம் என்ன கேட்பது? தலையில் பொருளை சுமந்தவாறு என்ன என்பது போல் தலைநீட்டி ஒருவர் என்னைப் பார்த்தார். தயக்கத்துடன் "அந்த பொண்ணு..." என்றேன். "யாரு நான்ஸியா..?" "ஆமாம்" என்றேன். அவர் சுமையை லாரியில் நின்றவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த பொருள் எடுக்க உள்ளே சென்றுவிட்டார். அவர் தகவல் சொல்லி அவள் வெளியே வருவாள் என நினைத்தேன். அடுத்தடுத்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரம் அங்கேயே நின்றேன். அந்த பெண் வெளியே வரவே இல்லை. தொடர்ந்து நிற்கும்போதுதான் "சுரீர்" என்றது. ஒருவேளை அந்த பெண் வெளியே வந்தாலும் நான் என்ன பேசப்போகிறேன்.? பதில் தோன்றவில்லை. என்னையறியாமல் என் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினேன். மனம் சுமைகூடி இருந்தது.
-மணிபாரதி துறையூர்