Thursday, February 11, 2016

நம்பிக்கைகளைத் தகர்க்கும் விசாரணை

திருடக் கூடாது பொய் சொல்லக் கூடாது என்பதை நம் தாத்தா பாட்டி ஆயிரம் முறை சொல்லக் கேட்டிருப்போம். “நாம ஒன்னும் தப்பு செய்யல; நமக்கு ஒன்னும் கெடுதல் நடக்காதுஎன்று வீட்டில் நம்மை விட மூத்தவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். அந்த பெரியவர்கள் மறைந்துவிட்டாலும், நம் வாழ்வில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது ஆறுதல் தறுபவை நம் காதுகளில் எதிரொலிக்கும் இந்த வார்த்தைகள் தான். ”நமக்கு எதுவும் கெடுதல் நடக்காதுஎன்ற நம்பிக்கைதான் ஏழை நடுத்தர வர்க்க மக்களுக்கு வாழ்க்கை மீதான பிடிப்பையும் நேர்மறை எண்ணத்தையும் கொடுக்கிறது. அந்த அடிப்படை ஆதாரமே தகர்ந்து போனால்?


திரைப்படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே நம் ஆதார நம்பிக்கைகள் தகர்ந்துபோவதிலிருந்து திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் கையறு நிலையோடு நம்மைப் பொருத்திப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். நம்மை எதிரில் பார்ப்பது போல் உணர்கிறோம்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி நமக்கும் நேர்கிறது. அவர்களுக்கு எழும் குழப்பம் நமக்கும் வருகிறது. இந்த identification தான் நம்மை படத்தோடு ஒன்றச் செய்துவிடுகிறது. இடைவேளை வரை இனி என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்பதை மட்டும் நம் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

மனசாட்சி இல்லாத கதாபாத்திரங்களுக்கு இடையே, தன் வேலையை தக்க வைத்துக்கொள்ள மிருகமாக மாறும் கதாபாத்திரங்களுக்கு இடையே, பிரதான கதாபாத்திரங்களுக்கு நடக்கும் அநீதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து மனம் தளர்ந்து போயிருக்கும் வேளையில், புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் போலீஸ், தமிழ் நாட்டு இன்ஸ்பெக்ட்டர் போன்ற கதா பாத்திரங்களை உலவ விட்டிருப்பது ஆறுதல் தந்தாலும், corrupted system அவர்களை எவ்வாறு தடம் மாற்றுகிறது;  பேராசை, நப்பாசைக்காரர்களின் power game-இல் அவர்கள் எப்படி பலியாகிறார்கள் என்பதை எல்லாம் பார்க்கும்போது நாம் இன்னும் தகர்ந்து போகின்றோம்.

திரைப்படங்கள் வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட எனக்கு இப்படிப்பட்ட திரைப்படங்கள் பதிவு செய்யப்பட வேண்டிய தேவையை உணர்த்துகின்றன. ஜெயிலுக்கு போனவன் குடும்பம் என்று ஒரு குடும்பமே நிராகரிக்கப்படும் சம்ப்வங்கள் இன்றைக்கும் நடக்கும் சூழலில், இப்படிப்பட்ட ப்டங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் இருப்பையும், நாம் பார்த்தும் பார்க்காமலும் போகும் அவர்களை ஒரு சில வினாடிகள் நினைத்துப் பார்க்க வைக்கிறது.


எறும்புக்கும் வாழ்க்கை உண்டு என்பதைப்போல் அவர்களுக்கும் ஆசைகள் கனவுகள் உண்டு, அவை எல்லாம் நிராசையாவதற்கு யார் காரணம்? கனவு காணவும் ஆசைப்படவும் அவர்களுக்கு உரிமை இல்லையா? அவர்கள் செய்த தவறுதான் என்ன? போன்ற கேள்விகளும் நம்முள் எழுகின்றன.

கதாபாத்திரங்களின் நேர்மை நம்மை ஆசுவாசப் படுத்தினாலும், இதிலிருந்து இவர்கள் எப்படி மீளப்போகிறார்கள் என்கிற பதைபதைப்பு படம் முழுவதும் நமக்குத் தொடர்கிறது. காரிலிருந்து இடையில் இறங்கும் கதாபாத்திரத்தை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம். அதனால் தான் நமக்கு நடந்த அநீதிகளை வெளி உலகுக்குச் சொல்ல இருவரில் ஒருவராவது உயிரோடு இருக்க வேண்டுமென்று பிரதான கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும்போது உயிர் பிழைத்து விடுவார்கள் என்று கொஞ்சமெனும் வரும் நம்பிக்கை இறுதி காட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் விம்மி வெடிக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு வெறுமை உணர்வு தோன்றுகிறது. நம்மை உறங்கவிடாமல் செய்கிறது.

செய்தித்தாளில் வரும் செய்திகள் எல்லாம் எவ்வாறு புனையப்படுகின்றன என்ற அதிர்ச்சியும் நாம் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது நம்மை நிலைகுலைய வைக்கின்றன.

கோர்ட்டில் முதன்மைக் கதாபாத்திரம் உண்மையைச் சொல்லப்போவதை நாம் எதிர்பார்த்தாலும் முக்கியமான அந்த காட்சியப் படமாக்கும் முன்பு ஒத்திகைகள் நடத்தி இன்னும் இயல்பாக செய்திருக்கலாம்.

திரையில் காக்கிச் சட்டையிலேயே பார்த்துப் பழகிய சில முகங்களைத் தவிர்த்து புதிதாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். தெலுங்கு பேசத் தெரியாதவர்களை தமிழில் பேச வைத்து டப்பிங்கின் போது தெலுங்கு பேசவத்திருப்பதும் சிலரது உதட்டசைவில் தெரிகிறது.

காவல் துறை உயரதிகாரியாக நடித்திருப்பவரது உருவம் he is not going to be a honest guy என்கிற யூகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது உண்மை. இருப்பினும், இயல்புக்கு மீறிய நடிப்பு சலிப்பைத் தருகிறது. இயக்குனரின் நிதானமான குரலும் அந்த restless and dishonest கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை.

ஆந்திர இளைஞர்களை 52 பைக் திருடியதாக ஒத்துக்கொள்ளவைக்கப்படும் காட்சியில் ஒலியைப் பயன்படுத்திய அளவுக்கு characters movement- இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நகர்ந்து சென்று துவாரத்தில் பார்கும்போது ம்ரண ஓலத்தைக் கேட்கும் மற்ற கதாபாத்திரங்களின் மனநிலை என்ன?

இவையெல்லாம் ஆதங்கங்கள் மட்டுமே குறைகள் அல்ல.

 ஆறுதலான விசயங்கள், பாராட்டப்ப்பட வேண்டிய விசயங்கள் ஆயிரம் இருக்கின்றன. காலங்காத்தால வேலைக்கு வந்த பையனை ஏன் திட்றீங்க என்று தெலுங்கு பேசும் முதலாளி மனைவியின் குரல், தெலுங்கில் பேசும் வேலைக்காரப் பெண்ணின் பிரச்சினையை சுலபமாக புரிந்துகொள்ளும் (தமிழ் மட்டுமே தெரிந்த) முதன்மைக் கதாபாத்திரம், முகம் கழுவிக் கொண்டே உதவி செய்யும் பெண்போலீஸ், என்று சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நாம்பார்த்துக் கொண்டிருப்பது திரைப்படம் என்பதை மறக்க வைத்து அதை ஓர் அனுபவமாக மாற்றுபவை ஒளிப்பதிவும் இசையும்தான். கேமராவும் இசையும் படத்தில் இருப்பதே தெரியாததற்கு அவர்களின் அதீத ஈடுபாடும் உழைப்பும் தொழில் நுணுக்கங்கள் நன்கு அறிந்த அற்பணிப்பு உணர்வுடன் கூடிய பங்களிப்புதான் காரணம்.

நண்பர்களுக்காக முதன்மைக் கதாபாத்திரம் பனைமட்டையில் அடிவாங்கித் துவளும் நீண்ட காட்சி மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. ஆடிட்டர் காவல் நிலையத்தில் தொங்கவிடப்படுவது, அவரது கை முறிக்கப்படுவது, வீட்டில் மீண்டும் தொங்கவிடப் படுவது போன்ற வசனங்களற்ற காட்சிகள் பார்வையாளனை உறையவைக்கும் பிம்பமாக வலிமை சேர்க்கின்றன.


இருவரும் எப்படியாவது தப்பி விட மாட்டார்களா என்கிற பதைபதைப்பில் நம் இதயத்துடிப்பு எக்கச்சக்கமாக இருக்கும் இறுதிக் காட்சியில்தப்பி ஓடும் நண்பன் துப்பாக்கி போலீசால் வளைக்கப்பட்டதோடு காட்சி நிறுத்தப்படுவதும், முதன்மைக் கதாபாத்திரம் அதீத உயிர் பயத்தில் இருக்கும் நிசப்தக் கணங்களில், ஒற்றைத் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சப்தம் நம் காதுகளுக்கு மிக அருகில் கேட்கும்போது நம் இதயத்துடிப்பை ஒரு வினாடி உறையச் செய்து செய்து திகிலடையவைக்கிறது. இது மிகச்சிறந்த காட்சி அமைப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு அமைப்பு என்பேன்.

வேலைக்கார பெண்,முதன்மை நடிகர், நண்பன், ஆந்திர இன்ஸ்பெக்ட்டர், தமிழ்நாட்டு இன்ஸ்பெக்ட்டர், பெண் போலீஸ், ஆடிட்டர் போன்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு மிகப் பொருத்தம்.

குறிப்பாக ஆடிட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோரும் தமிழ் நாட்டு இன்ஸ்பெக்ட்டராக வரும் சமுத்திரகனியும் மிகவும் இயல்பாக natural performance கொடுத்திருக்கிறார்கள்.

இந்த கதையை எடுத்துக்கொண்டு எல்லா துறைகளிலும் நேர்மையாக பதிவு செய்த இயக்குனரின் தீர்க்க தரிசனத்தால்தான் இப்படிப்பட்ட ஒரு நல்ல திரைப்படம் நமக்கு காணக் கிடைத்திருக்கிறது.

கதைக்கும் காட்சி அமைப்பிற்கும் முக்கியத்துவம் தரும் நிறைவான ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி எனக்கு இருக்கிறது. அது ஒரு தமிழ் திரைப்படமாக இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தமிழ் சினிமாவை தரமான படைப்பு என்கிற இலக்கு நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் விசாரணை முக்கியமான திரைப்படம். காலம் கடந்து பேசப்படும்.

- மணிபாரதி துறையூர்

Monday, September 22, 2014

மூன்றாவது நபர்

புதிதாக சென்னைக்கு வந்த நண்பர் என்னிடம்…

நண்பர்: மணி சிலம்பம் பற்றி பழைய தமிழ் புத்தகங்கள் எல்லாம் படிக்கணும். எந்த லைப்ரரியில கிடைக்கும்?
நான்: கன்னிமரா போங்க நிறைய புத்தகங்கள் கிடைக்கும்.
மூன்றாவது நபர்: அய்யே அங்கேல்லாம் போகாதீங்க. அங்கே ஏஸியே கிடையாதுங்க.
நான்: கன்னிமரால நீங்க உறுப்பினரா இல்லைன்னாலும் ஜெராக்ஸ் போட்டுக்குற வசதி செஞ்சிருக்காங்க. வேண்ம்னா சில பக்கங்களை ஜெராக்ஸ் போட்டுக்கலாம்.
மூன்றாவது நபர்: அங்கே இருந்த புத்தகங்களை எல்லாம் எல்லாரும் திருடிட்டு போயிட்டாங்க. நீங்க சொல்றமாதிரி அரிதான புத்தகங்கள்லாம் அங்கே இருக்காது.
நான்: அங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்காங்க. அப்டீல்லாம் திருட்டிட்டு போக முடியாது.
மூன்றாவது நபர்: நான் சொல்றது அதுக்கும் முன்னாடி
நான்: கன்னிமரா போங்க. அங்கே புத்தக தலைப்பு, ஆசிரியர் பெயர் எல்லாம் கம்ப்யூட்டர்ல பதிவு செஞ்சு வச்சிருக்காங்க. நீங்க விரும்புற தலைப்பு புத்தகத்தை சீக்கிரமா தேடி எந்த Rack எந்த Row-ன்னு சுலபமா கண்டுபிடிச்சுடலாம்.
மூன்றாவது நபர்: அய்யே அங்கேல்லாம் போகாதீங்க அங்கே ஏஸியே கிடையாது.

இனிமேலும் இந்த உரையாடலைத் தொடரும் எண்ணம் எனக்கில்லை.

Monday, September 1, 2014

அழைப்பு

வெகுநாட்களுக்குப் பிறகு உன்னிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது
நாட்கள் என்றால் நாட்கள் மட்டுமில்லை
ஆறு வருடங்கள், ஏழு மாதங்கள், எட்டுநாட்களுக்கு முன்பு நிகழ்ந்த
நம் பிரிவை நிகழ்த்திய கடைசி உரையாடலுக்குப் பின்
இப்போதுதான் வருகிறது உன் அழைப்பு.
கைபேசியில் உன் பெயர் பார்த்ததும் மனதில் ஒரு மின்னதிர்வு.
என்ன பேசப்போகிறாயோ எதற்காக அழைத்திருக்கிறாயோ
ஆயிரம் எண்ணங்கள் மின்னிச்சென்றன.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும்
உன்னிடம் என் கைபேசி எண் இருப்பது ஆறுதல் தந்தது
எத்தனை வாய்ப்புகள் வந்தபோதும்
எத்தனை முறை கைபேசி தொலைத்தபோதும்
இத்தனை வருடங்களாய் தொடர்பு எண்ணை மாற்றாமல் இருப்பது
என்றேனும் உன்னிடமிருந்து அழைப்பு வரலாம் என்ற நப்பாசைதான்.
இதோ உன்னிடமிருந்து அழைப்பு.
ஆயிரம் தயக்கங்களும், அன்று நிகழ்ந்த உரையாடலின் எதிரொலியும் என் தொண்டை பிசைய
குரல்கம்மி சொன்னேன்
ஹலோ
பதிலில்லை
உன் பிடிவாதம் இன்னும் மாறவில்லையோ?
மீண்டும் சொன்னேன்
ஹலோ
நிசப்தம்
சிறிது நேரம் மெளனித்திருந்தேன்.
எதிர்முனையில் பதிலேதுமில்லை.
ஏதேதோ சத்தம் கேட்டது
ஹலோ
வெகுநாட்களுக்குப் பிறகு தயக்கத்தோடு உன் பெயர் உச்சரித்தேன்.
"-----------"
கண்கள் கலங்கின
உன்னிடமிருந்து பதிலேதுமில்லை.
காற்றாடியின் சத்தமா, தொலைக்காட்சி பாடலா தெளிவில்லை
சிறிதுநேரம் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இறுதியாக இன்னொரு முறை ஹலோ சொன்னேன்
பதிலேதுமில்லை.
மனச்சுமையோடு கைபேசியை.அமர்த்தினேன்.
வெறுமையில் மனம் கனத்தது.
எதற்காக அழைத்திருப்பாய்
மனம் மாறிவிட்டாயா?
ஒவ்வொரு சச்சரவுக்குப் பின்னும்
நான் விட்டுக்கொடுத்து போனதுபோல்
இப்போதும் நானே பேசவேண்டும் என நினைக்கிறாயா?
அறையின் குளிர்ச்சியும்
பன்னிரண்டாம் மாடி அலுவலகத்தின்
கண்ணாடி சுவரினூடே தெரியும் மாநகரின் கட்டிடங்களும்
என் மனச்சுமையைக் குறைக்கவில்லை
காற்றில் மிதக்கும் மெல்லிசையும்,
கதவில் உஷ் சொல்லும் குழந்தையின் கண்சிரிப்பும்
சூழலை மாற்றவில்லை.
ஆயிரம் குழப்பங்களோடு
உன் எண்ணை அனிச்சையாய் அழைத்தேன்
அடித்து ஓய்ந்தது
மீண்டும் அழைத்தேன்.
அழைப்பு ஏற்கப்பட்டது
ஹலோ
உன் குரல் தான்.
நான்: எனக்கு கால் வந்துது.
நீ: குழந்தை விளையாடிக்கிட்டு இருந்துது, SORRY.

Tuesday, July 1, 2014

பழைய காதலிகள்

பள்ளிக்கூட காதலிகள்
கல்லூரி காதலிகள்
அலுவலகக் காதலிகள்
திரையில் பார்த்த காதலிகள்
ஒவ்வொருவருக்கும் திருமணமானது
ஏதேனும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கணத்தில்

சபிக்கப்பட்ட ஒரு தினத்தில்
பட்டியலிட்டுப் பார்த்தபோது உரைத்தது
என் எல்லா காதலிகளுக்கும் திருமணமாகியிருந்தது
திருமணமான பெண்களை
இனி காதலித்தல் தர்மமில்லை.

எனினும்
எனக்குப் பிடித்த நிறத்தில் உடையணிந்து
உடன் நடந்து
அதே பள்ளிகளிலும்
கல்லூரி காரிடாரிலும்
அலுவலகக் காஃபிடீரியாவிலும்
உலவிக்கொண்டுதானிருக்கிறார்கள்
என் பழைய காதலிகள் இன்னும்
நிழற்படங்களிலும் நினைவுகளிலும்



-மணிபாரதி துறையூர்


Saturday, March 1, 2014

மெல்லிசை

என் நெற்றியில் முத்தமிட வேண்டாம்
புருவம் வருடி உறங்க வைக்க வேண்டாம்
முதுகில் படர்ந்து காதைக் கடிக்க வேண்டாம்
பாதங்களை மடியிலேந்தி சொடக்கெடுக்க வேண்டாம்
ஆப்பிள் நறுக்கித்தரவேண்டாம்
தேநீர் தந்து புன்னகைக்க வேண்டாம்
என்னிடம் பேசவேண்டுமென்பதில்லை
என்னை  நீ கவனிக்க வேண்டுமென்பதும்
எனக்கொரு பொருட்டல
நீ இயல்பாக இருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும்
விரல் கோர்த்து முகம் சாய்க்கும் கதகதப்பும்
நீ மூச்சுவிடும் மெல்லிசையும் போதுமெனக்கு
ஆயிரமாயிரமிருந்தாலும் உன் அருகாமை போல் வருமா?

-மணிபாரதி துறையூர்

Saturday, December 28, 2013

கிரில் கேட்டைப் பிடித்துக்கொண்டு நிற்பவள்

ஓவியம்: இளையராஜா
நான்  (ஹோட்டலுக்கு) சாப்பிடப் போகும் வழியில் ஒரு தங்கும் விடுதி. அங்கே ஒரு பெண் இருப்பாள். வேலை நேரம் போக வெளியே வந்து கிரில் கேட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருப்பாள். சில சமயம் படியில் அமர்ந்திருப்பாள். இந்த பரபரப்பான நகரத்திற்கும் அவளது பாவாடை தாவணிக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும். போகும்போதும் வரும்போதும் பார்ப்பேன். சில நேரங்களில் அவள் புன்னகைப்பாள். பார்க்காததுபோல் இருந்துவிடுவேன். அருகில் இருக்கும் பழக்கடையில்  பழங்கள் வாங்குவேன். அந்த கடைக்காரம்மா இல்லாதபோது இவள் கடையில் நிற்பாள். அப்படிப்பட்ட தருணங்களில் நான் அங்கே பழம் வாங்குவதில்லை.

ஒரு முறை அந்த கடைக்காரம்மா வரட்டும் என்று வெகுநேரம் நின்றிருந்தேன். "உங்க பேரென்ன" என்றாள். நான் பதில் சொல்லவில்லை. பழம் வாங்காமலேயே திரும்பிவிட்டேன். ஒரு மழைநாளில் விடுதி வாசலில் ஒதுங்கி நின்றபோது "உங்க செல்ஃபோன் நெம்பர் தரீங்களா" என்றாள். "எதற்கு" என்றேன். "குடுங்க, பேசும்போது சொல்றேன்" என்றாள். நான் தூறலில் நனைந்துகொண்டே வந்துவிட்டேன். அவள் பெயர் கூட எனக்குத் தெரியாது. மற்ற நேரங்களில் அவளை நினைத்ததில்லை. அந்த இடத்தை கடக்கும்போது மட்டுமே அவள் நினைவுக்கு வருவாள். அவள் இருந்தால் பார்க்காமல் கடந்துவிடுவேன். அவள் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லாவிட்டால், நடந்துகொண்டே வேறெங்கும் இருக்கிறாளா என்று பார்ப்பேன்.

ஒரு முறை என் அறைக்கு அருகில் உள்ள மளிகைக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பியபோது இவள் எதிரே வந்தாள். "உங்க வீடு இங்கேதானா" என்றாள். "ஆமாம்" என்றேன். "எது" என்றாள். நான் பதில் பேசவில்லை. அவள் என் அறையை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக காரணமே இல்லாமல் லுங்கி பனியனோடு அடுத்த தெருவரை நடந்துவிட்டு திரும்பினேன்.

இப்படியாக ஐந்தாறு வருடங்களாயிற்று.

இன்று இரவு சாப்பிட்டுவிட்டு திரும்பும்போது அந்த பெண்  நின்றுகொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக விடுதியை விட்டு வெளியே வந்து வாசலில் நின்றுகொண்டிருந்தாள். நான் வருவதைப் பார்த்ததும் ஒரு முறை நேருக்கு நேர் என்னை பார்த்தாள், பின் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். நான் வழக்கம்போல் கடந்து வந்துவிட்டேன். சில அடிகள் நடந்த பிறகுதான் ஏதோ வித்தியாசமாகப் பட்டது.

அந்த விடுதிக்கு அருகே ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது.  கட்டில், மெத்தை, ஏஸி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். லாரி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விடுதியை காலி செய்கிறார்கள் என்பது உரைத்தது. திரும்பி வந்து அங்கே நின்றேன்.  யாரிடம் என்ன கேட்பது? தலையில் பொருளை சுமந்தவாறு என்ன என்பது போல் தலைநீட்டி ஒருவர் என்னைப் பார்த்தார். தயக்கத்துடன் "அந்த பொண்ணு..." என்றேன். "யாரு நான்ஸியா..?"  "ஆமாம்" என்றேன். அவர் சுமையை லாரியில் நின்றவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த பொருள் எடுக்க உள்ளே சென்றுவிட்டார். அவர் தகவல் சொல்லி அவள் வெளியே வருவாள் என நினைத்தேன். அடுத்தடுத்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் அங்கேயே நின்றேன். அந்த பெண் வெளியே வரவே இல்லை. தொடர்ந்து நிற்கும்போதுதான் "சுரீர்" என்றது. ஒருவேளை அந்த பெண் வெளியே வந்தாலும் நான் என்ன பேசப்போகிறேன்.? பதில் தோன்றவில்லை. என்னையறியாமல் என் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினேன். மனம் சுமைகூடி இருந்தது.

-மணிபாரதி துறையூர்

Monday, May 21, 2012

சுமை

ஓரிரவுப் பயணமாய் இருந்தாலும்
இரண்டு பகல் ஓரிரவு நீளும்
தொலைதூரப் பயணங்களாய் இருந்தாலும்
துரத்தும் உன் நினைவுகளை
எதிர்காற்றில் ஊதி உதறிவிடும் எண்ணத்தில்
ஜன்னல் இருக்கைகளையே
தேடித் தேடி அமர்கிறேன்.

புகைவண்டியின்
கனத்த சுவாசம் போல் நீண்டு
நெடுங்காலமாய் என்னை
துரத்திக்கொண்டே தொடர்கின்றன

ஒவ்வொரு பயணத்திலும்
உன் நினைவுகள்

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்..
ஆயிரம் கேள்விகளின்
சுமை அழுத்த
தொடர்கின்றன என் பயணங்கள்..
ஏதேனும் ஒரு வடநாட்டு வழித்தடத்தில்
இருண்ட குகைக்குள்
ரயில் பயணிக்கையில்
வரம் போல்
வைரம் போல்
வனதேவதை போல்
என்னருகில் வந்தமர்வாயா...

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்...

-மணிபாரதி துறையூர்

Thursday, May 10, 2012

வாழ்க்கைப் பாடம் # 1 (அக்கறை)


என் அப்பா பள்ளி ஆசிரியர். வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடம் எடுப்பார். பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்று மாலை எங்களுக்கு சொல்வார். சிறு வயதில் புரியாத சில விசயங்கள் இப்போது நினைத்துப்பார்க்கும்போது மிகப்பெரிய படிப்பினையைத் தருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்.

வழக்கம்போல் அன்றும் என் அப்பா பள்ளிக்கு சென்றார். காலை அணிவகுப்பு, கொடியேற்றம் முடிந்ததும் பதினோறாம் வகுப்பு வரலாறு பிரிவு மாணவர்களில் சிலர் (ரெளடி கும்பல்) ஒரு பிரச்சினையை கிளப்பினார்கள். தமிழாசிரியர் எல்லோர் முன்னிலையிலும் பதினோறாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனிடம் (குமார்) மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவர்கள் எழுப்பிய பிரச்சனை. தமிழாசிரியர் "நான் எதுவும் தவறாக சொல்லவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கும் எண்ணம் துளி கூட இல்லை" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

தலைமை ஆசிரியர் இந்த பிரச்சனையில் தலையிட விருப்பமில்லாமல் விலகிக்கொண்டார். இப்போது தமிழாசிரியருக்கு ஆதரவாக என் அப்பாவும் சக ஆசிரியர்களும் மட்டுமே. இன்று இந்த பிரச்சனையை எழுப்பும் மாணவர்களுக்கு வகுப்பு நடக்காமல் செய்வதுதான் வழக்கமாக இருந்தது. அதனால் ஒரு 10 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் யாரும் இந்த பிரச்சனைக்கு ஆதரவு தரவில்லை. எனினும் காலை அணிவகுப்பில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டுவிட்டதால் அது 1000 மாணவர்களுக்கும் 50 ஆசிரியர்களுக்கும் தெரிந்த விஷயம் ஆகிவிட்டது. தமிழாசிரியர் 1000 மாணவர்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்பது மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. தலைமை ஆசிரியர் பிரச்சனையில் இருந்து விலகிக்கொண்டது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

பதினோறாம் வகுப்பில் என் அக்காவும் ஒரு மாணவி. அப்பா என் அக்காவை அழைத்து பிரச்சனையை தெரிந்துகொண்டார். பிரச்சனை இதுதான். ரெளடி கும்பல் மாணவர்கள் முன் தினம் நடந்த தமிழ் சிறப்பு வகுப்பிற்கு வரவில்லை. நன்றாக படிக்கும் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன் குமார் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவன். அவனும் சிறப்பு வகுப்பிற்கு வரவில்லை. அதற்கு காரணம் இந்த ரெளடி கும்பல் மாணவர்களின் தூண்டல். ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கும் மாணவர்களின் மேல் எப்போதுமே தனி பாசம் இருக்கும். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் கூடுதல் உரிமையோடு அவர்களை கண்டிப்பார்கள். அந்த கோபத்தில் “அந்த நொண்டிப்பயலும் அவனுங்களோட சேர்ந்துக்கிட்டானா?” என்கிற தொனியில் கேட்டிருக்கிறார். தமிழாசிரியர் இப்படி கேட்டதை சிறப்பு வகுப்பிற்கு வந்த யாரோ ஒருவர் ரெளடி கும்பலுக்கு கோள் சொல்லிவிட்டனர். சிறப்பு வகுப்பிற்கு வராத மாணவர்களின் மேல் தமிழ் ஆசிரியர் மறுநாள் (இன்று) நடவடிக்கை எடுப்பார் என்பதால் அதற்கு முன்பாகவே இந்த பிரச்சனையை எழுப்பி தப்பிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

பிரச்சனையை புரிந்துகொண்ட என் அப்பா, ரெளடி கும்பல் மாணவர்களை அழைத்து ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். தமிழாசிரியர் நொண்டி என்று சொன்னதால் எங்கள் நண்பன் மனம் புண்பட்டிருக்கிறான் அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். உடல் ஊனமுற்ற மாணவனும் அந்த கும்பலில் இப்போது நின்றுகொண்டிருக்கிறான்.


என் அப்பா அவர்களிடம், ”தமிழாசிரியர் குமாரை நொண்டி என்று சொன்னபோது அங்கே குமார் இல்லை. நீங்கள் உண்மையிலேயே உங்கள் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்று நினைத்திருந்தால் தமிழாசிரியர் அவனை நொண்டி என்று சொன்னதைப்போய் குமாரிடம் சொல்லியே இருக்கக் கூடாது. அப்போதுதான் உங்கள் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்று உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் உங்களுக்கு தமிழாசிரியருடன் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது, அவரைப் பழி வாங்குவதற்காக உங்கள் நண்பனை பகடைக்காய் ஆக்கி தமிழாசிரியர் உன்னை நொண்டி என்று சொல்லிவிட்டார் அவரை மன்னிப்பு கேட்ட வைக்கிறோம் என்று பிரச்சனை கிளப்புகிறீர்கள். உங்களது உண்மையான எண்ணம் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்பதல்ல. தமிழாசிரியரை பழிவாங்க வேண்டும் என்பதுதான்” என்று சொன்னதும் ரெளடி கும்பல் பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட்டார்கள்.

என் அப்பா குமாரிடம் திரும்பி “நீ புத்திசாலி மாணவன், இவர்களின் எண்ணம் உனக்கு புரிவதாய் இருந்தால் ஒழுங்காக வகுப்பிற்குப் போ இல்லை என்றால் நாங்கள் இவர்களை (ரெளடி கும்பல்) கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் இனி உன்னையும் கண்டுகொள்ளமாட்டோம்.” என்று சொல்லிவிட்டார். குமார் அங்கிருந்து விலகி வகுப்பிற்கு சென்றுவிட்டான். பிரச்சனை தீர்ந்துவிட்டது. எல்லோருக்கும் நிம்மதி.

-மணிபாரதி துறையூர்

Sunday, March 11, 2012

எருதின் நோய்


வெய்யில் காலங்களில்
வீட்டுக்கு வருபவர்கள்
ஏசி இல்லையா எனும்போதும்
வேலை கிடைத்தவன்
இன்னுமா இண்ட்டர்வியூக்கு எல்லாம் போறே எனும்போதும்
கார்பைக் வைத்திருப்பவன்
எப்படித்தான் பஸ்லே போறியோ
எனும்போதும்
பழகிப்போய்விட்டது
மெளனமாய் இருக்கவும்
புன்னகைக்கவும்

எனினும்
புன்னகைக்கவோ
பேச்சை மாற்றவோ
கடினமாகத்தான் இருக்கிறது
திருமணப் பத்திரிக்கை வைக்க வந்தவன்
எட்டு வருசமா இதையேதான் சொல்ற
இன்னுமா உனக்கு பொண்ணு தேடுறாங்க
எனும்போது மட்டும்.


-மணிபாரதி துறையூர்

Sunday, August 21, 2011

வாசனை

தலைவலித் தைல வாசனை வரும்போதெல்லாம்
அக்காவின் நினைவு
பல்லி கெக்கரிக்கும் போதெல்லாம்
அம்மாவின் நினைவு
ஆறிய பாலைக் குடிக்க நேரும்போதெல்லாம்
அப்பாவின் நினைவு
ரயில்களைப் பார்க்கும்போதெல்லாம்
அண்ணனின் நினைவு
வாழ்த்து அட்டை வாங்கும்போதெல்லாம்
தோழிகள் நினைவு
மேன்ஷன்களைப் பார்க்கும்போதெல்லாம்
நண்பர்கள் நினைவு

கால ஓட்டத்தில்
இடம் மாறி, திசைமாறி
தூர தூர தேசங்களில்
குப்பை கொட்டிக்கொண்டிருந்தாலும்
துரத்தும் நினைவுகளில்
மறக்கவே முடியாத மனிதர்கள் 
வந்து வந்து போகிறார்கள்

உள்ளீடற்ற எதிர்மறை நிஜங்களைவிட
எப்போதும் மேலானவை
திரும்பக் கிடைக்காத நேர்மறை நினைவுகளின்
வாசனை

-மணிபாரதி துறையூர்