“திருடக் கூடாது பொய்
சொல்லக் கூடாது என்பதை நம் தாத்தா பாட்டி ஆயிரம் முறை சொல்லக் கேட்டிருப்போம். “நாம ஒன்னும் தப்பு செய்யல; நமக்கு ஒன்னும் கெடுதல் நடக்காது” என்று வீட்டில் நம்மை
விட மூத்தவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டு வளர்ந்திருக்கிறோம். அந்த
பெரியவர்கள் மறைந்துவிட்டாலும், நம் வாழ்வில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது ஆறுதல் தறுபவை நம்
காதுகளில் எதிரொலிக்கும் இந்த
வார்த்தைகள் தான். ”நமக்கு எதுவும் கெடுதல் நடக்காது” என்ற நம்பிக்கைதான் ஏழை
நடுத்தர வர்க்க மக்களுக்கு வாழ்க்கை மீதான பிடிப்பையும் நேர்மறை எண்ணத்தையும் கொடுக்கிறது. அந்த அடிப்படை ஆதாரமே தகர்ந்து போனால்?
திரைப்படம் தொடங்கிய ஒரு சில
நிமிடங்களிலேயே நம் ஆதார
நம்பிக்கைகள் தகர்ந்துபோவதிலிருந்து திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் கையறு நிலையோடு நம்மைப் பொருத்திப் பார்க்கத் தொடங்கிவிடுகிறோம். நம்மை எதிரில் பார்ப்பது போல் உணர்கிறோம்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி நமக்கும் நேர்கிறது. அவர்களுக்கு எழும் குழப்பம் நமக்கும் வருகிறது. இந்த identification தான் நம்மை படத்தோடு ஒன்றச் செய்துவிடுகிறது. இடைவேளை வரை இனி என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்பதை மட்டும் நம் மனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
மனசாட்சி இல்லாத கதாபாத்திரங்களுக்கு இடையே, தன்
வேலையை தக்க வைத்துக்கொள்ள மிருகமாக மாறும் கதாபாத்திரங்களுக்கு இடையே,
பிரதான கதாபாத்திரங்களுக்கு நடக்கும் அநீதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து மனம்
தளர்ந்து போயிருக்கும் வேளையில், புதிதாக வேலைக்கு சேர்ந்த பெண் போலீஸ், தமிழ்
நாட்டு இன்ஸ்பெக்ட்டர் போன்ற
கதா பாத்திரங்களை உலவ
விட்டிருப்பது ஆறுதல் தந்தாலும், corrupted system அவர்களை எவ்வாறு தடம் மாற்றுகிறது; பேராசை, நப்பாசைக்காரர்களின் power game-இல் அவர்கள் எப்படி
பலியாகிறார்கள் என்பதை எல்லாம் பார்க்கும்போது நாம் இன்னும் தகர்ந்து போகின்றோம்.
திரைப்படங்கள் வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்ற
கொள்கை கொண்ட எனக்கு இப்படிப்பட்ட திரைப்படங்கள் பதிவு
செய்யப்பட வேண்டிய தேவையை உணர்த்துகின்றன. ஜெயிலுக்கு போனவன் குடும்பம் என்று ஒரு குடும்பமே நிராகரிக்கப்படும் சம்ப்வங்கள் இன்றைக்கும் நடக்கும் சூழலில், இப்படிப்பட்ட ப்டங்கள் விளிம்பு நிலை
மனிதர்களின் இருப்பையும், நாம்
பார்த்தும் பார்க்காமலும் போகும் அவர்களை ஒரு சில
வினாடிகள் நினைத்துப் பார்க்க வைக்கிறது.
எறும்புக்கும் வாழ்க்கை உண்டு என்பதைப்போல் அவர்களுக்கும் ஆசைகள் கனவுகள் உண்டு, அவை எல்லாம் நிராசையாவதற்கு யார் காரணம்? கனவு காணவும் ஆசைப்படவும் அவர்களுக்கு உரிமை இல்லையா? அவர்கள் செய்த தவறுதான் என்ன? போன்ற கேள்விகளும் நம்முள் எழுகின்றன.
எறும்புக்கும் வாழ்க்கை உண்டு என்பதைப்போல் அவர்களுக்கும் ஆசைகள் கனவுகள் உண்டு, அவை எல்லாம் நிராசையாவதற்கு யார் காரணம்? கனவு காணவும் ஆசைப்படவும் அவர்களுக்கு உரிமை இல்லையா? அவர்கள் செய்த தவறுதான் என்ன? போன்ற கேள்விகளும் நம்முள் எழுகின்றன.
கதாபாத்திரங்களின் நேர்மை நம்மை ஆசுவாசப் படுத்தினாலும், இதிலிருந்து இவர்கள் எப்படி மீளப்போகிறார்கள் என்கிற பதைபதைப்பு படம் முழுவதும் நமக்குத் தொடர்கிறது. காரிலிருந்து இடையில் இறங்கும் கதாபாத்திரத்தை நாம் சுலபமாக மறந்துவிடுகிறோம். அதனால் தான்
நமக்கு நடந்த அநீதிகளை வெளி உலகுக்குச் சொல்ல
இருவரில் ஒருவராவது உயிரோடு இருக்க வேண்டுமென்று பிரதான கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும்போது உயிர் பிழைத்து விடுவார்கள் என்று கொஞ்சமெனும் வரும் நம்பிக்கை இறுதி காட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் விம்மி வெடிக்கிறது. படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு
வெறுமை உணர்வு தோன்றுகிறது. நம்மை
உறங்கவிடாமல் செய்கிறது.
செய்தித்தாளில் வரும் செய்திகள் எல்லாம் எவ்வாறு புனையப்படுகின்றன என்ற அதிர்ச்சியும் நாம் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது நம்மை
நிலைகுலைய வைக்கின்றன.
கோர்ட்டில் முதன்மைக் கதாபாத்திரம் உண்மையைச் சொல்லப்போவதை நாம் எதிர்பார்த்தாலும் முக்கியமான அந்த காட்சியப் படமாக்கும் முன்பு ஒத்திகைகள் நடத்தி இன்னும் இயல்பாக செய்திருக்கலாம்.
திரையில் காக்கிச் சட்டையிலேயே பார்த்துப் பழகிய சில முகங்களைத் தவிர்த்து புதிதாக நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். தெலுங்கு பேசத்
தெரியாதவர்களை தமிழில் பேச
வைத்து டப்பிங்கின் போது
தெலுங்கு பேசவத்திருப்பதும் சிலரது உதட்டசைவில் தெரிகிறது.
காவல் துறை உயரதிகாரியாக நடித்திருப்பவரது உருவம் he is not going to be a honest guy என்கிற யூகத்தை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது உண்மை.
இருப்பினும், இயல்புக்கு மீறிய நடிப்பு சலிப்பைத் தருகிறது. இயக்குனரின் நிதானமான குரலும் அந்த
restless and dishonest கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை.
ஆந்திர இளைஞர்களை 52 பைக் திருடியதாக ஒத்துக்கொள்ளவைக்கப்படும் காட்சியில் ஒலியைப் பயன்படுத்திய அளவுக்கு characters movement-ஐ இன்னும் சிறப்பாக கையாண்டிருக்கலாம். ஒரே ஒரு
கதாபாத்திரம் மட்டுமே நகர்ந்து சென்று துவாரத்தில் பார்கும்போது ம்ரண ஓலத்தைக் கேட்கும் மற்ற கதாபாத்திரங்களின் மனநிலை என்ன?
இவையெல்லாம் ஆதங்கங்கள் மட்டுமே குறைகள் அல்ல.
ஆறுதலான விசயங்கள், பாராட்டப்ப்பட வேண்டிய விசயங்கள் ஆயிரம் இருக்கின்றன. காலங்காத்தால வேலைக்கு வந்த பையனை
ஏன் திட்றீங்க என்று
தெலுங்கு பேசும் முதலாளி மனைவியின் குரல், தெலுங்கில் பேசும் வேலைக்காரப் பெண்ணின் பிரச்சினையை சுலபமாக புரிந்துகொள்ளும் (தமிழ்
மட்டுமே தெரிந்த) முதன்மைக் கதாபாத்திரம், முகம் கழுவிக் கொண்டே உதவி செய்யும் பெண்போலீஸ், என்று சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
நாம்பார்த்துக் கொண்டிருப்பது திரைப்படம் என்பதை மறக்க வைத்து அதை
ஓர் அனுபவமாக மாற்றுபவை ஒளிப்பதிவும் இசையும்தான். கேமராவும் இசையும் படத்தில் இருப்பதே தெரியாததற்கு அவர்களின் அதீத
ஈடுபாடும் உழைப்பும் தொழில் நுணுக்கங்கள் நன்கு அறிந்த அற்பணிப்பு உணர்வுடன் கூடிய
பங்களிப்புதான் காரணம்.
நண்பர்களுக்காக முதன்மைக் கதாபாத்திரம் பனைமட்டையில் அடிவாங்கித் துவளும் நீண்ட
காட்சி மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. ஆடிட்டர் காவல்
நிலையத்தில் தொங்கவிடப்படுவது, அவரது கை முறிக்கப்படுவது, வீட்டில் மீண்டும் தொங்கவிடப் படுவது போன்ற
வசனங்களற்ற காட்சிகள் பார்வையாளனை உறையவைக்கும் பிம்பமாக வலிமை
சேர்க்கின்றன.
இருவரும் எப்படியாவது தப்பி விட
மாட்டார்களா என்கிற பதைபதைப்பில் நம் இதயத்துடிப்பு எக்கச்சக்கமாக இருக்கும் இறுதிக் காட்சியில், தப்பி ஓடும்
நண்பன் துப்பாக்கி போலீசால் வளைக்கப்பட்டதோடு காட்சி நிறுத்தப்படுவதும், முதன்மைக் கதாபாத்திரம் அதீத உயிர்
பயத்தில் இருக்கும் நிசப்தக் கணங்களில், ஒற்றைத் துப்பாக்கி குண்டு வெடிக்கும் சப்தம் நம் காதுகளுக்கு மிக
அருகில் கேட்கும்போது நம்
இதயத்துடிப்பை ஒரு வினாடி உறையச் செய்து செய்து திகிலடையவைக்கிறது. இது மிகச்சிறந்த காட்சி அமைப்பு மற்றும் ஒலி வடிவமைப்பு அமைப்பு என்பேன்.
வேலைக்கார பெண்,முதன்மை நடிகர், நண்பன், ஆந்திர இன்ஸ்பெக்ட்டர், தமிழ்நாட்டு இன்ஸ்பெக்ட்டர், பெண் போலீஸ், ஆடிட்டர் போன்ற
கதாபாத்திரங்களுக்கான
நடிகர்கள் தேர்வு மிகப் பொருத்தம்.
குறிப்பாக ஆடிட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோரும் தமிழ் நாட்டு இன்ஸ்பெக்ட்டராக வரும்
சமுத்திரகனியும் மிகவும் இயல்பாக natural performance கொடுத்திருக்கிறார்கள்.
இந்த கதையை எடுத்துக்கொண்டு எல்லா
துறைகளிலும் நேர்மையாக பதிவு
செய்த இயக்குனரின் தீர்க்க தரிசனத்தால்தான் இப்படிப்பட்ட ஒரு
நல்ல திரைப்படம் நமக்கு காணக் கிடைத்திருக்கிறது.
கதைக்கும் காட்சி அமைப்பிற்கும் முக்கியத்துவம் தரும் நிறைவான ஒரு
திரைப்படம் பார்த்த திருப்தி எனக்கு இருக்கிறது. அது
ஒரு தமிழ் திரைப்படமாக இருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தமிழ் சினிமாவை தரமான
படைப்பு என்கிற இலக்கு நோக்கி முன்னெடுத்துச் செல்வதில் விசாரணை முக்கியமான திரைப்படம். காலம் கடந்து பேசப்படும்.
- மணிபாரதி துறையூர்
That was a well analysed review, Mani. It goes beyond the usual way of reviewing a film. Nice!
ReplyDeleteHi sir thanks a lot for your appreciation and compliment.
Delete