
கடைசிநாள்
"முகவரி வேண்டும்" என்றாள்.
ஆட்டோகிராப் புத்தகத்தில்
எழுதிக்கொண்டே கேட்டேன்.
"எதற்கு எதெல்லாம்...
கடிதம் எழுதுவாயா நீ ..?"
"நிச்சயம் எழுதுவேன்"
உறுதியாகச் சொன்னாள்.
புன்னகைத்துப் புத்தகம் கொடுத்தேன்.
ஒன்று இரண்டு பல கடிதங்கள்
இரண்டு நான்கு பல வருடங்கள்
பதிலே இல்லை.
எல்லாம் வேஷம்;
சொன்னதெல்லாம் பொய்.
வெகுநாள் கழித்து
வேறோர் ஊரில் எதிர்பட்டாள்.
"ஐயோ..! நம்பவே முடியலை...
எவ்வளவு சந்தோஷமாயிருக்கு...
உன்னைப் பார்க்க" என்றாள்."
போதும் நிறுத்து
பொய் வார்த்தை பேசாதே..!"
வெடித்தேன்.
"உன் கோபம் புரிகிறது
மன்னித்துவிடு.
உன்னைப்போல்
முற்போக்கு குடும்பமில்லை எனது.
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லி
அவர்கள் முன்னால்
கடிதம் எழுதுவதும் சாத்தியமில்லை.
புத்தகங்களில் உன் கவிதை படிக்கிறேன்.
தொலைபேசியில் குரல் கேட்கிறேன்.
கடிதங்களால் தன்னம்பிக்கை கொள்கிறேன்.
எப்போதும் போல்
எழுது- பேசு-
என்னை மறந்துடாதே"
சொல்லி நடந்து புள்ளியானாள் தோழி.
ஒன்று இரண்டு பல கடிதங்கள்
இரண்டு நான்கு பல வருடங்கள்
பதிலே இல்லை.
என்றேனும் எழுதுவாள்...
ஆண்-பெண் நட்பு புரிந்த
அண்ணனோ தம்பியோ
கணவனோ மகனோ
பேரனோ வாய்க்கும் நாளில்.
-துறையூர் மணி
ஓவியம்: Phyllis Rash Hughes
எனது "நிகழ்தகவு" கவிதை 03-08-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது.