Saturday, March 7, 2009

அம்மா

படிப்புக்காக நானும்
என் செலவுக்கு
பணம் சேர்க்க நீயும்
தூரங்களில் சுவாசிக்கிறோம்.

நாகரீகத்தில் செழிக்கும்
என் நல்ல நண்பன்
வாரம் இருமுறை
தன் வீட்டுக்கு கடிதம் எழுதுகிறான்.
அன்னையர் தினத்தன்றும்
அம்மாவின் பிறந்தநாளன்றும்
அழகிய வாழ்த்து அட்டைகள் அனுப்பி
தன் அன்பைச் சொல்கிறான்.

இதையெல்லாம் பார்க்கும்போது
எனக்கும் ஆசைதான்
தேடித்தேடி தேர்வுசெய்து
வாழ்த்து அட்டைகள் அனுப்பவும்
நெக்குருகி நான் எழுதும்
கடிதங்களையும் கவிதைகளையும்
நீயே படித்து நெகிழ்ந்துணர்வதைப் பார்க்கவும்.

அனால் அம்மா...
கஷ்டப்பட மட்டுமே கற்றிருக்கும் நீ
கொஞ்சம் கல்வியும் கற்றிருக்கக் கூடாதா?

-துறையூர் மணி


எனது அம்மா கவிதை www.ambalam.com June 2001 -ல் பிரசுரமானது.

2 comments: