Saturday, March 7, 2009

தொக்கி நிற்கும் கேள்விகள்


* சோகங்களின் சுமை கூடும்போது
புல்லாங்குழலிசை கேட்பாயா
பூச்செடிகளுக்கு நீருற்றுவாயா?

* கடிதத்தில் சில இடங்கள்
கலங்கியிருந்தனவே அழுதாயா?

* வடுக்களில் சூடுபட்டால்
வலிக்குமா முன்போல்?

* எப்போது பழகப்போகிறது மனம்
ஆளில்லாத வீட்டின் பூட்டை
இழுத்துப் பார்க்காமல் திரும்புவதற்கு.

* இப்போதும்
திரும்பிப் பார்க்கிறாயா
என் பெயர் சொல்லி
பிறர் அழைத்தால்...

* கண்ணில் படாமல்
இருந்திருக்கக் கூடாதா
புயலில் இறந்தோர் பட்டியலில்
உன் சாயல் புகைப்படம்.

* நீ வரும் நாளில்
எப்போதும் போல்
வாசல் திறந்திருக்கும்
நான் இருப்பேனா
எதிர்கொண்டு வரவேற்க...

* நேற்று பெய்த மழையில்
நனைந்தாயா?
எனக்கு ஜலதோஷம்.

* சொல்ல மறந்த
பிறந்தநாள் வாழ்த்தைவிட
சுமையானதா...
வெளிசொல்லாத நேசம்?

* அஞ்சல் நிலையத்திலும்
தெரிவிக்க வில்லையா?
உன் முகவரி மாற்றத்தை...

* பிளாஸ்டிக் பூவைச் சுற்றிய
வண்ணத்துப் பூச்சி
உன் அன்புக்கு ஏங்கிய நான்
அதிகம் ஏமாந்தது யார்?

* குமுறல்களை
அதிகம் பகிர்ந்துகொள்வது
தலையணையா
கவிதைகளா..?

* எடைக்குப் போயிருக்குமோ..?
பரண் மேல் கிடந்த
பழைய புத்தகத்தோடு
ஸ்டிக்கர் பொட்டும் ரோஜாவும்...

-துறையூர் மணி


எனது "தொக்கி நிற்கும் கேள்விகள்" கவிதை
23-03-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது

1 comment:

  1. my fav lines ..

    இப்போதும் திரும்பி பார்க்கிறாயா என் பெயர் சொல்லி பிறர் அழைத்தால் ..

    all the best ..keep going ..

    nasser
    donnasser@gmail.com

    ReplyDelete