கவிதையாய் ஒரு வாழ்க்கை
Followers
Blog Archive
Thursday, March 5, 2009
இதயத்துடிப்பும் பாதச்சுவடும்
இளவேனிற் காலத்தில்
திரும்பி வருவதாய்
சொல்லிப்போனாய்
ஊதாப்பூக்களோடு
உனக்காக காத்திருந்தேன்
இலையுதிர்காலம் தொட்டே
இலைகள் உதிர்ந்து
இளவேனிலும் வந்தது
நீ மட்டும் வரவே இல்லை
இதயம் கனத்துக் காத்திருந்தேன்
இன்னும் பல பருவங்கள்
அதன் பிறகும் நீ வரவே இல்லை
பிறகுக்கும் பிறகு வந்த
மற்றொரு இலையுதிர் காலத்தில்
இலைகளோடு சேர்ந்து
நானும் உதிர்ந்து போனேன்
கடைசி விருப்பமாக
நீ வரும் வழியிலேயே
என்னை விதைத்திருக்கிறார்கள்
நீ உணராமல் போன
என் இதயத்துடிப்பைப் போல் அல்ல
உன் பாதச்சுவடுகள் கூட
எனக்குப்புரியும்
என்றைகாவது நீ
என்னைத் தேடி வருவதை
சருகுகள் சொல்லும்போது
நான் விழித்துக்கொள்வேன்
அது ஒரு இளவேனிற்காலமாய் இருக்கும்.
-துறையூர் மணி
குறிப்பு:எனது இந்த கவிதை JULY 1998 "குமுதம் ஸ்பெஷல்" மாத இதழில் திரு.மாலன் அவர்கள் ஆசிரியராக பணியாற்றியபோது பிரசுரமானது.
Subscribe to:
Post Comments (Atom)
<<<<<<<<<>>>>>>>>>>
ReplyDeleteஎன்றைகாவது நீ
என்னைத் தேடி வருவதை
சருகுகள் சொல்லும்போது
நான் விழித்துக்கொள்வேன்
அது ஒரு இளவேனிற்காலமாய் இருக்கும்.
<<<<>>>>>
நினைவுகளை சீண்டும் வார்த்தைகளுடன் விளையாடி கொண்டிருக்கும் கவிதை
போகிற போக்கில் சம்பிராதயமாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டு போகிறவர்களுக்கு தெரியாது, அந்த வார்த்தைகளுக்காக தவமிருக்கும், யுகங்களைக் கடந்தும் ஒரு இதயம் என்பது.
ReplyDelete"யார் மனதில்... யார் இருப்பார்... யார் அறிவார் உலகிலே..."
திரு துறையூர் மணி அவர்களுக்கு,
ReplyDeleteநான் உங்களுடைய "இதயத் துடிப்பும் பாதச்சுவடும்" கவிதையை என்னுடைய 18-வது வயதில் வாசித்தேன். நான் வாசித்த காதல் கவிதைகளில் இதுவே சால சிறந்த கவிதையாக திகழ்ந்தது.
நீண்ட காலம் உங்கள் கவிதை வெளி வந்த பத்திரிகையின் பின் அட்டையை பத்திரமாய் வைத்திருந்தேன். கால சூழலில் அப்புததகம் தொலைந்து போக, நான் எனது டைரி - இல் எழுதி வைத்திருந்தது இன்னும் பத்திரமாய் 10 வருடங்களாக என்னிடம் இருக்கிறது.. நான் கவிதை எழுத துவங்கிய காலகட்டம் அது...
என்னுடைய ஆரம்ப கால கவிதைகளில் உங்கள் கவிதையின் பாதிப்பு அதிகமாக இருந்தது என்பதை இங்கே மனம் திறந்து சொல்லி கொள்ள ஆசை படுகிறேன். கவிதையை மட்டுமே வாசித்து விட்டு ஆசிரியர் யார் என்று கூட தேடாத பருவம் அது. என்னுடைய டீன்- ஏஜ் பருவத்தில் நான் வாசித்த கவிதையின் ஆதர்ச நாயகன் நீங்கள் என அறிந்த போது ஏற்பட்ட பரவசம் இன்னும் அடங்கவில்லை.
உங்கள் தொடர்ச்சியான கவிதை மழையில் தொடர்ந்து நனைய விரும்புகிறேன்..நன்றி,,,
நன்றி Stalin
ReplyDeleteஎனக்கும் மிகவும் திருப்தியான கவிதை "இதயத் துடிப்பும் பாதச்சுவடும்".
எனக்கும் அப்போது 18 வயதுதான் இருக்கும்.
அந்த வயதில் குமுதம் ஸ்பெஷல்-இல் கவிதை வந்ததை மறக்கவே முடியாது.
கவிதையை அனுப்பிவிட்டு ஒவ்வொரு மாதமும் பிரசுரம் ஆகிஇருக்குமோ என்று புத்தகம் வாங்கி பார்ப்பதும். பிரசுரமானதும் அளவில்லாத "விண்ணில் பறக்கும்" மகிழ்ச்சியும் இன்னமும் என் மனதில் பசுமையாக நினைவிருக்கிறது.