Thursday, March 5, 2009

இடைவெளி


மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு
கொட்டாவி விட்டபடி
"அதெல்லாம் ஒரு காலம்" என்று
அப்பா சொல்லும்போது அதன்
அர்த்தம் புரியாது எனக்கு

இன்று சாரலின் சலசலப்பில்
நிலைப்படியில் நின்று
முகத்தை நீட்டி
மூக்கை மட்டும் நனையவிட்டு
கதகதப்புக்காக கட்டிய கை அவிழ்த்து
ஒரு கை நீட்ட
உள்ளங்கையில் விழுந்த சிறு துளியின் சிலிர்ப்பு
உடலெல்லாம் பரவி உச்சந்தலை வருட
வானவில்லாய் வளைந்த நினைவுகளில்
கத்திக்கப்பல் விட்டதும்
கண்ணாமூச்சி விளையாட்டும்
கண்முன் நிழலாடும்
"அதெல்லாம் ஒரு காலம்"


-துறையூர் மணி

எனது "இடைவெளி" கவிதை 27-04-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது

9 comments: