Monday, May 21, 2012

சுமை

ஓரிரவுப் பயணமாய் இருந்தாலும்
இரண்டு பகல் ஓரிரவு நீளும்
தொலைதூரப் பயணங்களாய் இருந்தாலும்
துரத்தும் உன் நினைவுகளை
எதிர்காற்றில் ஊதி உதறிவிடும் எண்ணத்தில்
ஜன்னல் இருக்கைகளையே
தேடித் தேடி அமர்கிறேன்.

புகைவண்டியின்
கனத்த சுவாசம் போல் நீண்டு
நெடுங்காலமாய் என்னை
துரத்திக்கொண்டே தொடர்கின்றன

ஒவ்வொரு பயணத்திலும்
உன் நினைவுகள்

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்..
ஆயிரம் கேள்விகளின்
சுமை அழுத்த
தொடர்கின்றன என் பயணங்கள்..
ஏதேனும் ஒரு வடநாட்டு வழித்தடத்தில்
இருண்ட குகைக்குள்
ரயில் பயணிக்கையில்
வரம் போல்
வைரம் போல்
வனதேவதை போல்
என்னருகில் வந்தமர்வாயா...

எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்...

-மணிபாரதி துறையூர்

Thursday, May 10, 2012

வாழ்க்கைப் பாடம் # 1 (அக்கறை)


என் அப்பா பள்ளி ஆசிரியர். வரலாறு மற்றும் சமூக அறிவியல் பாடம் எடுப்பார். பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை அன்று மாலை எங்களுக்கு சொல்வார். சிறு வயதில் புரியாத சில விசயங்கள் இப்போது நினைத்துப்பார்க்கும்போது மிகப்பெரிய படிப்பினையைத் தருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்.

வழக்கம்போல் அன்றும் என் அப்பா பள்ளிக்கு சென்றார். காலை அணிவகுப்பு, கொடியேற்றம் முடிந்ததும் பதினோறாம் வகுப்பு வரலாறு பிரிவு மாணவர்களில் சிலர் (ரெளடி கும்பல்) ஒரு பிரச்சினையை கிளப்பினார்கள். தமிழாசிரியர் எல்லோர் முன்னிலையிலும் பதினோறாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனிடம் (குமார்) மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவர்கள் எழுப்பிய பிரச்சனை. தமிழாசிரியர் "நான் எதுவும் தவறாக சொல்லவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கும் எண்ணம் துளி கூட இல்லை" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

தலைமை ஆசிரியர் இந்த பிரச்சனையில் தலையிட விருப்பமில்லாமல் விலகிக்கொண்டார். இப்போது தமிழாசிரியருக்கு ஆதரவாக என் அப்பாவும் சக ஆசிரியர்களும் மட்டுமே. இன்று இந்த பிரச்சனையை எழுப்பும் மாணவர்களுக்கு வகுப்பு நடக்காமல் செய்வதுதான் வழக்கமாக இருந்தது. அதனால் ஒரு 10 மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் யாரும் இந்த பிரச்சனைக்கு ஆதரவு தரவில்லை. எனினும் காலை அணிவகுப்பில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டுவிட்டதால் அது 1000 மாணவர்களுக்கும் 50 ஆசிரியர்களுக்கும் தெரிந்த விஷயம் ஆகிவிட்டது. தமிழாசிரியர் 1000 மாணவர்கள் முன்னிலையில் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்பது மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. தலைமை ஆசிரியர் பிரச்சனையில் இருந்து விலகிக்கொண்டது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

பதினோறாம் வகுப்பில் என் அக்காவும் ஒரு மாணவி. அப்பா என் அக்காவை அழைத்து பிரச்சனையை தெரிந்துகொண்டார். பிரச்சனை இதுதான். ரெளடி கும்பல் மாணவர்கள் முன் தினம் நடந்த தமிழ் சிறப்பு வகுப்பிற்கு வரவில்லை. நன்றாக படிக்கும் முதல் மூன்று மாணவர்களில் ஒருவன் குமார் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவன். அவனும் சிறப்பு வகுப்பிற்கு வரவில்லை. அதற்கு காரணம் இந்த ரெளடி கும்பல் மாணவர்களின் தூண்டல். ஆசிரியர்களுக்கு நன்றாக படிக்கும் மாணவர்களின் மேல் எப்போதுமே தனி பாசம் இருக்கும். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் கூடுதல் உரிமையோடு அவர்களை கண்டிப்பார்கள். அந்த கோபத்தில் “அந்த நொண்டிப்பயலும் அவனுங்களோட சேர்ந்துக்கிட்டானா?” என்கிற தொனியில் கேட்டிருக்கிறார். தமிழாசிரியர் இப்படி கேட்டதை சிறப்பு வகுப்பிற்கு வந்த யாரோ ஒருவர் ரெளடி கும்பலுக்கு கோள் சொல்லிவிட்டனர். சிறப்பு வகுப்பிற்கு வராத மாணவர்களின் மேல் தமிழ் ஆசிரியர் மறுநாள் (இன்று) நடவடிக்கை எடுப்பார் என்பதால் அதற்கு முன்பாகவே இந்த பிரச்சனையை எழுப்பி தப்பிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

பிரச்சனையை புரிந்துகொண்ட என் அப்பா, ரெளடி கும்பல் மாணவர்களை அழைத்து ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். தமிழாசிரியர் நொண்டி என்று சொன்னதால் எங்கள் நண்பன் மனம் புண்பட்டிருக்கிறான் அதனால் அவர் பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். உடல் ஊனமுற்ற மாணவனும் அந்த கும்பலில் இப்போது நின்றுகொண்டிருக்கிறான்.


என் அப்பா அவர்களிடம், ”தமிழாசிரியர் குமாரை நொண்டி என்று சொன்னபோது அங்கே குமார் இல்லை. நீங்கள் உண்மையிலேயே உங்கள் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்று நினைத்திருந்தால் தமிழாசிரியர் அவனை நொண்டி என்று சொன்னதைப்போய் குமாரிடம் சொல்லியே இருக்கக் கூடாது. அப்போதுதான் உங்கள் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்று உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் உங்களுக்கு தமிழாசிரியருடன் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது, அவரைப் பழி வாங்குவதற்காக உங்கள் நண்பனை பகடைக்காய் ஆக்கி தமிழாசிரியர் உன்னை நொண்டி என்று சொல்லிவிட்டார் அவரை மன்னிப்பு கேட்ட வைக்கிறோம் என்று பிரச்சனை கிளப்புகிறீர்கள். உங்களது உண்மையான எண்ணம் நண்பனின் மனம் புண்படக்கூடாது என்பதல்ல. தமிழாசிரியரை பழிவாங்க வேண்டும் என்பதுதான்” என்று சொன்னதும் ரெளடி கும்பல் பதில் சொல்ல முடியாமல் நின்றுவிட்டார்கள்.

என் அப்பா குமாரிடம் திரும்பி “நீ புத்திசாலி மாணவன், இவர்களின் எண்ணம் உனக்கு புரிவதாய் இருந்தால் ஒழுங்காக வகுப்பிற்குப் போ இல்லை என்றால் நாங்கள் இவர்களை (ரெளடி கும்பல்) கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல் இனி உன்னையும் கண்டுகொள்ளமாட்டோம்.” என்று சொல்லிவிட்டார். குமார் அங்கிருந்து விலகி வகுப்பிற்கு சென்றுவிட்டான். பிரச்சனை தீர்ந்துவிட்டது. எல்லோருக்கும் நிம்மதி.

-மணிபாரதி துறையூர்