Saturday, December 28, 2013

கிரில் கேட்டைப் பிடித்துக்கொண்டு நிற்பவள்

ஓவியம்: இளையராஜா
நான்  (ஹோட்டலுக்கு) சாப்பிடப் போகும் வழியில் ஒரு தங்கும் விடுதி. அங்கே ஒரு பெண் இருப்பாள். வேலை நேரம் போக வெளியே வந்து கிரில் கேட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருப்பாள். சில சமயம் படியில் அமர்ந்திருப்பாள். இந்த பரபரப்பான நகரத்திற்கும் அவளது பாவாடை தாவணிக்கும் சம்மந்தமில்லாமல் இருக்கும். போகும்போதும் வரும்போதும் பார்ப்பேன். சில நேரங்களில் அவள் புன்னகைப்பாள். பார்க்காததுபோல் இருந்துவிடுவேன். அருகில் இருக்கும் பழக்கடையில்  பழங்கள் வாங்குவேன். அந்த கடைக்காரம்மா இல்லாதபோது இவள் கடையில் நிற்பாள். அப்படிப்பட்ட தருணங்களில் நான் அங்கே பழம் வாங்குவதில்லை.

ஒரு முறை அந்த கடைக்காரம்மா வரட்டும் என்று வெகுநேரம் நின்றிருந்தேன். "உங்க பேரென்ன" என்றாள். நான் பதில் சொல்லவில்லை. பழம் வாங்காமலேயே திரும்பிவிட்டேன். ஒரு மழைநாளில் விடுதி வாசலில் ஒதுங்கி நின்றபோது "உங்க செல்ஃபோன் நெம்பர் தரீங்களா" என்றாள். "எதற்கு" என்றேன். "குடுங்க, பேசும்போது சொல்றேன்" என்றாள். நான் தூறலில் நனைந்துகொண்டே வந்துவிட்டேன். அவள் பெயர் கூட எனக்குத் தெரியாது. மற்ற நேரங்களில் அவளை நினைத்ததில்லை. அந்த இடத்தை கடக்கும்போது மட்டுமே அவள் நினைவுக்கு வருவாள். அவள் இருந்தால் பார்க்காமல் கடந்துவிடுவேன். அவள் வழக்கமாக நிற்கும் இடத்தில் இல்லாவிட்டால், நடந்துகொண்டே வேறெங்கும் இருக்கிறாளா என்று பார்ப்பேன்.

ஒரு முறை என் அறைக்கு அருகில் உள்ள மளிகைக் கடையில் ஏதோ வாங்கிக் கொண்டு திரும்பியபோது இவள் எதிரே வந்தாள். "உங்க வீடு இங்கேதானா" என்றாள். "ஆமாம்" என்றேன். "எது" என்றாள். நான் பதில் பேசவில்லை. அவள் என் அறையை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக காரணமே இல்லாமல் லுங்கி பனியனோடு அடுத்த தெருவரை நடந்துவிட்டு திரும்பினேன்.

இப்படியாக ஐந்தாறு வருடங்களாயிற்று.

இன்று இரவு சாப்பிட்டுவிட்டு திரும்பும்போது அந்த பெண்  நின்றுகொண்டிருந்தாள். வழக்கத்திற்கு மாறாக விடுதியை விட்டு வெளியே வந்து வாசலில் நின்றுகொண்டிருந்தாள். நான் வருவதைப் பார்த்ததும் ஒரு முறை நேருக்கு நேர் என்னை பார்த்தாள், பின் வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். நான் வழக்கம்போல் கடந்து வந்துவிட்டேன். சில அடிகள் நடந்த பிறகுதான் ஏதோ வித்தியாசமாகப் பட்டது.

அந்த விடுதிக்கு அருகே ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது.  கட்டில், மெத்தை, ஏஸி போன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். லாரி கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. விடுதியை காலி செய்கிறார்கள் என்பது உரைத்தது. திரும்பி வந்து அங்கே நின்றேன்.  யாரிடம் என்ன கேட்பது? தலையில் பொருளை சுமந்தவாறு என்ன என்பது போல் தலைநீட்டி ஒருவர் என்னைப் பார்த்தார். தயக்கத்துடன் "அந்த பொண்ணு..." என்றேன். "யாரு நான்ஸியா..?"  "ஆமாம்" என்றேன். அவர் சுமையை லாரியில் நின்றவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த பொருள் எடுக்க உள்ளே சென்றுவிட்டார். அவர் தகவல் சொல்லி அவள் வெளியே வருவாள் என நினைத்தேன். அடுத்தடுத்து பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் அங்கேயே நின்றேன். அந்த பெண் வெளியே வரவே இல்லை. தொடர்ந்து நிற்கும்போதுதான் "சுரீர்" என்றது. ஒருவேளை அந்த பெண் வெளியே வந்தாலும் நான் என்ன பேசப்போகிறேன்.? பதில் தோன்றவில்லை. என்னையறியாமல் என் அறையை நோக்கி நடக்கத்தொடங்கினேன். மனம் சுமைகூடி இருந்தது.

-மணிபாரதி துறையூர்

8 comments:

  1. Achicho.. kadaisileyum pesave illaaiyaa !!! Very nice plain neat narration.. good one Mani :)

    ReplyDelete
  2. நல்லாருக்கு பாஸ்.. எல்லோருக்கும் ஏதோ ஒரு அனுபவம் மனதில் தங்கிவிடுகிறது. என்னுடைய அனுபவம் இங்கே..http://rbaala.blogspot.sg/2013/10/blog-post_14.html
    அதுமட்டுமல்ல, ஓவியர் இளையராஜாவின் ஓவியம் அனைவருக்கும் கைகொடுத்திருக்கிறது. அந்தக்கலைஞனுக்கு ஒரு டைட்டில் கார்டு போட்டிருங்க..

    ReplyDelete
  3. neenga eppo dhan pesuveenga mani

    ReplyDelete
  4. வார்த்தைகளைவிட மெளனம் உரக்க பேசும்.

    ReplyDelete
  5. ஒரு வேலை பேசி இருந்தால் அந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து இருக்குமா பாஸ்.

    ReplyDelete
  6. இந்த கேள்விக்கு பதில் முக்கியமில்லை. உங்களை இப்படி சிந்திக்க வைத்ததே போதும்.

    ReplyDelete